கடவுள்னா இப்படித்தான், தப்பு செஞ்சா குத்தும் ,வம்பு செஞ்சா எத்தும் அப்படின்னு ஒரு கோடு போட்டு அந்த கோட்டுக்கு அப்பால இது இது சாமி, சாமின்னா இப்படி இருக்கும் சாமி நல்லது மட்டும்தான் பண்ணும் அப்படின்னு சொல்லி சொல்லியே சாமி எல்லாத்தையும் நல்ல சாமியாவே ஆக்கிறுவாய்ங்க நம்மாளுக. வடிவேல் சொல்றமாதிரி இவன் என்னை ரொம்ப நல்லவேண்ணுட்டான்டான்னு சாமியும் கருமம் இந்த நல்லதை செஞ்சு நல்ல சாமியாவே இருந்துட்டு போய்ருவோம்ன்னு இருந்திடுதுங்க.
சாமிகள்ட்ட பக்தர்களும் பக்தியை மட்டும் காமிச்சு அழுது பொறண்டு அசைச்சுப்புறுவாய்ங்க. அதிலயும் சில சாமிகள் எக்ஸெம்ப்சானாகவும் இருக்கும் உதாரணமாக முனீஸ்வரர்,கருமலையான்,அய்யனார் காளியாத்தா, நொண்டி முனி, சுடலை முனி , வானமுனின்னு ஒரு க்ருப்பு சாமிகள்ட்ட இவிங்க அஞ்சாறு அடி தள்ளி நின்னுதான் சகவாசம் வச்சுப்பாய்ங்க.தக்காளி அவனுகள்ளாம் பொலேர்னு அப்பிருவான்னு அவர்களுக்குள்ள ஒரு பயம் . ஆனால் இது எல்லாத்தையும் மீறி நியூட்ரலா கடவுளாகவும் மனுசனாகவும் லீலைகளும், குசும்பும், குடைச்சலும் கொடுத்துட்டு குளக்கரையில் போய் பொம்பளப்புள்ளைகள் குளிக்கிறத வேடிக்கை பார்த்துட்டு அசால்ட்டா வருவார் பாருய்யா எங்காளு, தட்ஸ் மை டூட் 😜 😍 எஸ் அவரேதான் ஆயர்குல ஆண்டவன், ஆழிலை மன்னன்,கோபியர் கண்ணன், துவாரகையின் மன்னன் ஸ்ரீ கிருஷ்ணன்.
சின்னவயசில ஞாயிற்றுக்கிழமை காலையில் 9 மணிக்கு தூர்தர்சன்ல போட்ற சீரியலுக்கா வீடு வீடா அழைஞ்சு திரிஞ்சுபார்ப்பேன் .சக்திமானும் கிருஷ்ணவதாரமும் என் ஞாயிறுகளின் சிறப்புகள். மற்ற கடவுள்களின் பெயரைச் சொல்லும் போதும் கிருஷ்ணா, கண்ணா என்று விளிக்கும்போது ஏற்படும் நெருக்கம் ஒரு மெல்லிய வருடும் தருணம் இந்தாள்ட்ட எதோ நிச்சயமா ஒரு மாயம் இருக்கு , நீங்க நாத்திகனோ? ஆத்திகனோ? ஆனால் நீங்க நிச்சயம் கண்ணனால் கவரப்படுவீங்க என்பது மிகையில்லா உண்மை.
கிருஷ்ணா இந்த பெயருக்குள்ள இருக்கிற கவர்ச்சியை போலவே இவரும் ஒரு கவர்ச்சி மன்னன் பிகர்புல்லிங்ல கைதேர்ந்த ஆள் ராதா,பாமா,ருக்மணி,ஜாம்பவதி கோபியர்கள்ன்னு ஒரு ப்ளேபாயா இருந்துவந்திருக்கிறார்.
மற்ற கடவுளர்களைப் போல் அல்லாமல் விஷ்னு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் அதில் அல்டிமேட்னா அது கிருஷ்ணாவதாரம்தான் . கோகுலத்தில் சேட்டை பண்ணியதாகட்டும், பாஞ்சாலியை காத்ததாகட்டும், பாரதப்போரில் பாண்டவர்களை ரட்சித்தாகட்டும் எல்லாமே கிளாஸ். கிருஷ்ணன் என்னை மயக்கியதற்கு முக்கிய காரணம் மங்கையர்க்கரசி மேடம்தான் அவங்களோட சொற்பொழிவு எல்லாம் பிரமாதமானக இருக்கும் அதில் கிருஷ்ணரின் வரலாற்று சொற்பொழிவு அதி அற்புதமானது.
என் மார்பில் பலவருடங்களாக கிருஷ்ணன் வாழ்ந்து வருகிறான் ஒரு அனுக்கனாக.
இப்ப நாம் கண்ணனைப் பத்தி பேசுறோம் அப்படி பேசும்பொழுது அவரின் லீலைகளை பத்தி பேசலன்னா நல்லாருக்காது,
ஒரு முறை கோகுலத்தில் வெண்ணெய்ய் திருடி கையும் களவுமா மாட்டிக்கிட்டாப்ள அந்த கோபிகை ரொம்பக் கோவக்காரி
"அடேய் திருட்டுப்பயலே கண்ணா நீதான் என்வீட்டு வெண்ணெய்பூராம் காலி பண்றவனா? வாடா உங்காத்தாட்டன்னு" இழுத்துட்டு போறா.
கண்ணன் உரியில இருந்து இறஞ்கும்போதே வாயில இருந்த வெண்ணெயை நைசா அந்த கோபிகை வாயில தடவிட்டான். பிராது யசோதைக்கிட்ட போகுது
"இந்தாரு யசதோ இந்த திருட்டுப்பய தினம் என் வெண்ணெய் எல்லாம் காலி பண்ணிட்றான் இவனைக் கண்டி" அப்டிங்கிறா
அப்ப கண்ணன் சொல்றான் "யாரிடி திருடன் நானா? நீயா? உன் வாயிலதான்டி வெண்ணெய் ஒட்டியிருக்கு நீதான் திருடிங்கிறான்" .
"வெண்ணெய் இருக்கிறதை உணர்ந்த கோபிகை நீதான்டா என் வாய்ல அப்பிட்ட" அப்டிங்கிறா
அப்ப கண்ணன் "நான் அப்பினேனா உன் வாய் எனக்கு எட்டுமாடி, உன் வாய் எனக்கு எட்டு ' மாடி" அப்படின்னு இரட்டுற மொழிகிறான் .இருந்தும் யசோதை தண்டிச்சு உரலோட கட்டிப்போட்டி அப்பறம் அதை இழுத்துட்டு போய் இரண்டு யட்சர்களுக்கு சாப விமோசனம் தந்தது வேற கதை.
இதேமாதிரி பாரதப்போரில் கண்ணன் செய்த செயல்பாடுகள் அனைத்தும் ராஜதந்திரமிக்கவை அதில் ஒரு இடத்தில் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும போர் நடக்குது கர்ணனுக்கு சல்லியன் தேரோட்டினான் பாரதபோர் காலத்தில் சல்லியன் மிகச்சிறந்த தேரோட்டி நகுலன்,சகாதேவனின் தாய்மாமன் . போரின் உக்கிர நிலையில் சல்லியன் கர்ணனிடம் கூறுகிறான் கர்ணா நாகாஸ்திரத்தை அர்ஜுனனின் மார்புக்கு குறிவை என்று கர்ணன் சல்லியனின் பேச்சைக் கேளாமல் அவன் கழுத்துக்கு குறிவைக்கிறான். இரண்டொரு நொடியில் அர்ஜுனனின் தலை துண்டிக்கப்படலாம் என்ற நிலையில் கண்ணன் தேரை தரையில் அழுந்த தேய்க்க பாணம் அர்ஜுனனின் கிரீடத்தை தட்டிச் சென்றது.கோபம் கொண்ட சல்லியன் முட்டாளே நான் சொல்வதை கேட்டாயா இன்னும் ஒன்றும் குறைந்து போகவில்லை மீண்டும் ஒருமுறை மார்புக்கு குறிவை என்கிறான் . ஆனால் கர்ணன் குந்திக்கு கொடுத்த வாக்கின்படி இரண்டாமுறை நாகாஸ்திரத்தை எய்யவில்லை , தான் சொல்வதை கேட்காததால் தேரைவிட்டு நீங்கினான் சல்லியன் ,கர்ணன் கொல்லப்பட்டான்.
கௌரவ படையில் இருந்த ஜெயத்சேனா என்ற கௌரவன் நிராயுதபானி தவிர்த்து யார் மீதும் ஏவி கொல்லும் கதாயுதத்தை ஈசனிடம் வரமாக பெற்றவன். அர்ஜுனனை சந்திக்கிறான், பானங்களில் தோற்ற அவன் இறுதியாக ஈசனின் கதாயுதத்தை பிரயோகிக்கிறான். உலகம் கிடுகிடுக்க உறுமியவாறு பாய்கிறது கதாயுதம் பாண்டவர்கள் பதை பதைக்கிறார்கள், கௌரவர்கள் கொக்கரிக்கிறார்கள் பார்த்தனும் ஒரு நொடி கலங்கி பரந்தாமனைக் காண்கிறான். கண்ணன் புன்னகை ததும்ப தான் கையில் வைத்திருந்த சவுக்கை கீழே வைத்துவிட்டு எழுந்து நின்று அர்ஜுனனுக்கு முன்பாக தன் நெஞ்சில் ஏந்தினான் கதாயுதத்தை. ஈசனின் வரப்படி நிராயுதபானி மீது ஏவிய ஜெய்த்சேனா மடிகிறான். துரியோதனனுக்கும் ஏனையோருக்கும் ஒன்றும் பிடிபடவில்லை. அவன் சகுனியிடம்
" மாமா அந்த இடையன் மீது ஏவினால் இந்த மடையன் ஏன் சாகிறான் ?"
இதே போல் பாரத முழுவதும் பாண்டவர்களின் கவசமாக அவர்களை கண்ணிமைபோல் காத்தான் கண்ணன். நண்பனாக,ஆசானாக ,அண்ணனாக என அனைத்துமாகவும் நின்று அருள்பாலித்தவன் கண்ணன். பாரதம் மட்டுமன்றி அவனது லீலைகள் துவாபரயுகம் முழுவதும் வழிந்தோடியது என்றே கூறலாம்.கலியுகத்திலும் கண்ணன் புகழ் குன்றாது பல்கி பெருகி வருவது கண்கூடே
கண்ணதாசனின் கிருஷ்ணகானத்திற்கு ஈடாக இந்த மாயவனின் புகழ்பாடும் வேறெந்த மெல்லிசையும் இருந்து விட போவதில்லை.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன் ....
இனிய கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துகள் மக்களே 😍
SK.மகேஸ்வரன்


