பனிவிழும் மலர் வனம்
SSLC பரிட்சை லீவ் , சைக்கிள்ள வேகமா போக எந்திரிச்சு பெடல் போடும்போது செயின் கழண்டு உப்ப்ப்ப்ப்... ஆங்ங்ங்ங்க்க்க்க்க் அதேதான் அப்ப வெதர்ல ஒரு வலி ஏற்படும் தெரியும்ல அந்த மாதிரி இருந்தது நடராஜ்க்கு , மஞ்சுக்கு கல்யாணம்னு கேள்விபட்டதும். கல்யாணத்தை நிறுத்துறதுக்கு என்கிட்டையும் வெங்கிகிட்டையும் அழுது புரண்டு அணி திரட்டுனான். மஞ்சுவைப் போய் பார்த்து அவளை இழுத்துட்டு ஓடுறதுதான் ப்ளான். மஞ்சு பெரியப்பாவோட மீசையைப் பார்த்ததுமே எனக்கு அடிவயிறு கலங்கிருச்சு வெங்கி என்னைப் பார்க்க நான் வெங்கியை பார்க்க நடராஜ வேலிக்குள்ள தாவ ஹெல்ப் பண்ணிட்டு நாங்க தெருவையே தாண்டிட்டோம்.அப்பறம் காஜா பீடி காஞ்சனா டூரிங் டாக்கீஸ்ன்னு நடராஜ்ஜின் காதல் தோல்வியை ஈஸியா மாத்திட்டோம்.
மந்தைல மறைச்சு வச்ச உட்வார்ட்ஸ் பாட்டில் சாரயத்துக்கு உப்புக்கண்டம் ஒரு கிலோ திருடி வந்து கொடுத்திட்டு ஒப்பாரி வைக்கும்போதுதான் தெரிஞ்சது மஞ்சுவ நடராஜ் எந்தளவுக்கு காதலிச்சுறுக்கான்னு.உப்புக்கண்டம் உடம்பில இருந்தாலும் செஞ்சோற்று கடனுக்காக இல்லாம காதலுக்காக நடராஜை மஞ்சுவோட சேர்த்து வைக்க நண்பர் குழாம் முடிவு செய்தது. ராமாசாமிபட்டிக்கு வாக்கப்பட்டு போன மஞ்சுவை தேடி எங்கள் பயணம் தொடங்கியது.
நடராஜ்க்கு எங்கள் வேகமும் பிளானும் புதிய உத்வேகத்தை கொடுத்துச்சு அதே உத்வேகத்தோட அவன் அய்யா, கமிசன் கடை கல்லாப்பெட்டிய கபளீகரம் பண்ணான். நாலாருவா டிக்கட் நாலுன்னு அவன் கேட்கிறவரைக்கும் எங்கள் உடம்பில் இருந்த சாராயம் எங்க கொண்டுபோச்சுன்னே தெரியலே. "எங்க? ?" என்று வினவிய என்னிடம் "பார்த்திபனூர்ல எறங்குறோம் ஜெயவிலாஸ புடிக்கிறோம், மஞ்சுவ தூக்குறோம்." வெகு எளிதாக தொடைதட்டி பிரகடனம் செய்தவர் ஏற்கனவே அறிமுகமான வெங்கியின் அத்தை மகன் சேகர். கழனிப்பானை என்ற கீர்த்தி பெயருடன் வழங்கபெற்று வந்த சேகர் ஊரில் சண்டியர் என்று பெயர் வாங்கி வந்த காலமது. கீழ்வீட்டு செவிட்டுக்கிழவியின் சேவலையும், கீதாரியின் இளம்பிருவைக் குட்டி ஒன்றையும் கைக்கொண்டதோடு மட்டுமல்லாமல் கிழவியின் பேரனை வரப்பில் வைத்து நாலு அப்பு அப்பி புகழடைந்து கொண்டிருந்தான். நடராஜ்ஜின் காதலை சேர்த்து வைப்பதால் தன் புகழோடு சேர்ந்து கமிசன்கடை கரண்சியும் ஏகமாய் புழங்கும் என்று வெகுவாக நம்பினான்.
பார்த்திபனூரில் இறங்கியது முதல், கழனிப்பானை காலிங்கராயனாக மாறியிருந்தான். சட்டையை மடித்துவிட்டு நெஞ்சை விடைத்துக்கொண்டு அங்குமிங்கும் உலாவினான். இடையிடையே காற்றில் எதோ படம் வரைந்து கையை குத்திக்கொண்டான். " நட்டு பயப்படாத எல்லாம் பக்கா" என்று நடராஜ்ஜுக்கு ஊக்கமளித்துக் கொண்டான். நான் மெல்ல நடராஜை நெருங்கி " ஏன்டா இத்தனை வருசத்துக்குப்பிறகும் மஞ்சுவ மட்டுமே காதலிக்கிற பத்தியா நீ கிரேட்ரா" என்றேன். ஒரு வெட்கபுன்னகையுடன் சென்று நன்னாரி சர்பத் மூன்று வாங்கி வந்தான்.
பின்னர் ஜெயவிலாஸ் வரும் அறிகுறி தென்படாததால் அருப்புக்கோட்டை அரசாங்க வண்டியில் ஏறுவது என்று கழனிப்பானை முடிவெடுத்தான். தனது கர்லிங் ஹேரை ஏத்திசீவி தன் தோற்றத்தை வெகுவாக மாற்றிக்கொண்டார்.அவன் காதில் வெங்கி எதோ கேட்டான் அதெல்லாம் பிரச்சினை இல்லை விடு என்றான் கழனி.கமுதி முனியாண்டி விலாஸில் புரோட்டாவும் குடல்கறியும் உண்டுவிட்டு ராமசாமிபட்டியில் அடியெடுத்து வைத்தோம்...
சந்தன மாரியம்மன் கோயிலும் வேப்பமரத்தடி மந்தையும் சில்லுன்னு இருந்துச்சு. ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த பெருசுகளை நோக்கி போனான் கழனிப்பானை. சில நிமிட பேச்சுவார்த்தைக்குப்பிறகு வெற்றிக் குறி காட்டினான் நட்டுவின் முதுகில் தட்டினான் வெங்கி. காஜா பீடி கிட்டாத போதும் வலிப்புக்கு செய்யது பீடியை இனங்கண்டு கொண்ட கழனி எங்களை அழைத்துக்கொண்டு முன்நடக்கலானான்.சுப்பிரமணியபுரம் படத்தில் கஞ்சா கருப்பு நடந்து வந்த தோரணையை ஒத்திருந்தது கழனியின் நடை.
"எல்லாம் விசாரிச்சுட்டேன் புருசன் தீப்பெட்டி மில்லுல சூப்பரேசரா இருக்கானாம், மஞ்சுப்புள்ள மாமியாவோட வெண்டைக் களைக்குப் போய்ருக்காம். தோட்டம் புறகரைல இருக்கு கிழவி மட்டும்தான் கூட இருக்கா தோட்டத்தில மத்தவைங்களாம் இருக்காய்ங்களான்னு பார்த்துட்டு வாடா" என்று என்னை பணித்தான் கழனி.முதல் முறையாக ஒரு சிபிஐ ஆபிசர் ரேஞ்சுக்கு பீல் பண்ணி புறகரையை நோக்கி நடந்தேன்.ராமாநாதபுரம் ஜில்லாவுலயே பங்குனியில வெவசாயம் பன்றவைங்க இவிங்களாதான் இருப்பாய்ங்களாட்டு தெரியுது. வெண்டை, சாமந்திக்கூடே பல தலைகள் தெரிந்தன ஆனால் அது எதுவும் மஞ்சுவின் தலையை ஒத்திருக்கவில்லை.
தடாரேனெ என் பின் கழுத்தை ஒரு வலுக்கொண்ட கரம் சுற்றி பிடித்தது.சத்தியமாக அரண்டுபோனேன் அய்யனார் கோயில்ல கருநாகம் கவட்டைக்குள்ள பூந்தப்ப என்ன நிலைமல இருந்தேனோ அதே நிலைமை. சில நொடி ஆசுவாசத்திற்கு பிறகு என் கழுத்தை சுற்றியிருந்த கரத்தை நோக்கினேன். வண்டல் மண் அந்த முடிக்கற்றைகள் அடர்ந்த பலராமனின் கதாயுதத்தை ஒத்திருந்த கரத்தில் அப்பியிருந்தது. என்ன தம்பி யார்நீ மூஞ்சிய பார்த்ததே இல்லிய? ? என்ன இங்கன கிடந்து சலம்பிகிட்டு கிடக்க?.
வெண்டைக் களைகளில் மூழ்கியிருந்த அத்தனை விழிகளும் என்னை மொய்க்க ஆரம்பித்தன. "வத்ராப்ல சாமந்தி பறிக்க போனவ சங்கிலிய அறுத்துட்டு போனாய்ங்களாமே நேத்து" என்று ஒரு தண்டடட்டி கிழவி மெல்ல பற்றவைத்து எச்சில் முழுங்க வைத்தாள். "என்னப்பு ஆளுக கேட்கிறாகள சொல்லுங்க?" என்று அதட்டினார் இன்னொரு பீமன். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை அந்த நேரத்தில் மஞ்சுவின் முகம் நிழலாடியது. ஐயா நான் சிறுவயல்க்காரன்ங்க எங்கூரு புள்ளய இங்கதான் கட்டிக் கொடுத்துருக்கோம் அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.
"சிறுவயல்னா? ? நம்ம முனியசாமி பய பொண்டாட்டியா அந்த புள்ள பேரு என்ன மஞ்சுளாதானே? ?"
" ஆமாங்க ".
"ஆஹா தோ நிக்கிறாக பாரு மாமியாவும் மருமகளும் கூப்பிடுப்பா" என்றதும் ஒரு வாண்டு தூரத்தில் தெரிந்த இரண்டு தலைகளை நோக்கி ஓடியது. மஞ்சுவும் மாமியாவும் வருவது தெரிந்தது எனக்கு மஞ்சு அடையாளம் அற்றிருந்தாள் இரட்டை வடம் சங்கிலி , குங்குமபொட்டும் பூசுன உடம்புமாக வந்தாள். சில நொடிகள் என் முகத்தை கேள்விகுறியோடு பார்த்ததும் எனக்கு அடிவயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்தது.
" ஏய் பிரவு என்ன இம்புட்டு தூரம் கல்யாணத்துல பார்த்தது " என்று வியப்புணர்வுகளை அள்ளித் தெளித்தாள்.
"அருப்புக்கோட்டை வரைக்கும் வந்தேன் உன் ஞாபகம் வந்துச்சு அதேன் ஒரு எட்டு பார்த்துட்டு போலாம்னு..."
அதற்குள் மஞ்சுவின் மாமியா எங்களை சமீபித்தாள், "போத்தா போய் புள்ளைக்கு காப்பித்தண்ணி போட்டுக்கொடு" என்று ஏகினாள். அதன் பின்னரே அந்த பீமராமன்கள் விலகினர். மஞ்சு ஏதேதோ பேசியவாறு முன்நடந்து சென்றாள்.
நான் உம்ம்கொட்டியவாறு அவளை பின்தொடர்ந்தேன் ஏற்கனவே நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்றுத்தள்ளி பிரிந்து சென்ற சந்தில் நுழையமுயன்ற மஞ்சுவை , மஞ்சு ?? என்ன பிரவு நம்மூர் பயலுக வெங்கி சேகரு கூட வந்துருக்காய்ங்க என்றதும் விழிகளை பெரிதாக்கினாள். எங்கே அவிங்கள்ளாம் என்றாள். தூரத்தில் கழனிப்பானை எங்களைப் பார்ப்பது தெரிந்தது அவ்விடத்தை மஞ்சுவுக்கு சுட்டிக்காட்டினேன். மஞ்சு அவர்களை நோக்கி நடந்தாள் நான் பின் சென்றேன்.
"வெங்கடேசு , சேகர்ண்ணே எப்படி இருக்கீ..."
நட்டுவைப் பார்த்ததும் அதுவரை இருந்த மஞ்சு உருமாறி மருண்டாள், நட்டுவின் கண்களிலும் மஞ்சுவின் கண்களிலும் ஒரே நேரத்தில் முத்துகள் திரண்டன. அந்த அசாதாரணமான சூழலை கழனிப்பானை உடைத்தான்.
" நாங்கெல்லாம் நல்லாருக்கமுத்தா நீ எப்படி இருக்க? "
" நான் ரொம்ப நல்லாருக்கேன்ணே" என்று அழுத்தினாள் . " வாங்க " என்றவாறு கடைத்தெருவுக்குள் நுழைந்து தூக்குச் சட்டியில் பாலும் பிஸ்கெட்டும் வாங்கிக் கொண்டு ஒதுக்குப்புறமான அந்த வீட்டை நோக்கி நடந்தாள்.
" நான் ரொம்ப நல்லாருக்கேன்ணே" என்று அழுத்தினாள் . " வாங்க " என்றவாறு கடைத்தெருவுக்குள் நுழைந்து தூக்குச் சட்டியில் பாலும் பிஸ்கெட்டும் வாங்கிக் கொண்டு ஒதுக்குப்புறமான அந்த வீட்டை நோக்கி நடந்தாள்.
கழனிப்பானை அதுக்கிடையில் என்னிடம் தோட்டத்தில் நடந்தவற்றை அறிந்துகொண்டான். காபி டம்ளரை நீட்டிய மஞ்சுவை வச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் நட்டு.சுவற்றில் மாட்டியிருந்த மஞ்சுவின் கல்யாண படங்கள் அவனை வெகுவாக பாதித்திருக்க வேண்டும்,கீழே குணிந்து கண்ணீர் உகுத்தான் . மெல்ல வாசல்புறம் எட்டி பார்த்த கழனி மஞ்சுவைப் பார்த்து செருமினான்.
" மஞ்சு நாங்க எதுக்கு வந்துருக்கோம்னு தெரியுமா? " மஞ்சு கேள்வியோடு கழனியைப் பார்த்தாள்.
" நட்டு ரொம்ப ஒடிஞ்சுபோய்ட்டான் நீயும் மனசுக்கு பிடிக்காமல் வாழ்ந்துட்டு இருக்கே அதான் உன்னையும் அவனையும் ..."
மஞ்சு கலவரம் ஆனால் அந்த நேரத்தில் மூன்று வயது சிறுவன் ஒருவன் ஓடிவந்தான் . வேகமாக வந்த மஞ்சு அந்த சிறுவனை ஓடிச்சென்று வாரித்தூக்கிக் கொண்டு கண் கலங்க குரல் உடைபட " எம்புள்ளண்ணே " என்று கூறினாள். நட்டுவைப் பார்த்தாள் நட்டு கலங்கிய மஞ்சுவையும் புகைப்படத்தையும் பார்த்தான். கையில் இருந்த காபி டம்ளரை சிந்தாமல் மெல்ல கீழே வைத்தான், கண்களைத் துடைத்துக் கொண்டபடி வெளியேறினான்.
மஞ்சு கலவரம் ஆனால் அந்த நேரத்தில் மூன்று வயது சிறுவன் ஒருவன் ஓடிவந்தான் . வேகமாக வந்த மஞ்சு அந்த சிறுவனை ஓடிச்சென்று வாரித்தூக்கிக் கொண்டு கண் கலங்க குரல் உடைபட " எம்புள்ளண்ணே " என்று கூறினாள். நட்டுவைப் பார்த்தாள் நட்டு கலங்கிய மஞ்சுவையும் புகைப்படத்தையும் பார்த்தான். கையில் இருந்த காபி டம்ளரை சிந்தாமல் மெல்ல கீழே வைத்தான், கண்களைத் துடைத்துக் கொண்டபடி வெளியேறினான்.


அல்பம் தமிழ்ப் படம் பார்த்த ஞாபகம் அங்கங்கு நிழலாட அதை உள்வாங்கிக் கொண்டே படித்தேன். கற்பனையில் காட்சிகள் அகல விரிந்தன. கதையோட பினிஷிங் டச் சூப்பர். அட்டகாசமான றைட்அப். எதிர்க்க நண்பன் கதை சொல்ற மாதிரியே இருந்திச்சு. அருமை. 👌
ReplyDeleteThank you
Deleteஅல்பம் தமிழ்ப் படம் பார்த்த ஞாபகம் அங்கங்கு நிழலாட அதை உள்வாங்கிக் கொண்டே படித்தேன். கற்பனையில் காட்சிகள் அகல விரிந்தன. கதையோட பினிஷிங் டச் சூப்பர். அட்டகாசமான றைட்அப். எதிர்க்க நண்பன் கதை சொல்ற மாதிரியே இருந்திச்சு. அருமை. 👌
ReplyDelete